அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 1.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மழை மேலும் தீவிரமடைந்துள்ளது. பக்சா, பர்பேடா, டர்ராங், தேமாஜி, துப்ரி, கோக்ரஜார், லக்ஷிம்பூர், நல்பாரி, சோனித்பூர், உதால்குரி ஆகிய 10 மாவட்டங்கள் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக ஆணையம் அறிவித்துள்ளது.
குறிப்பாக நல்பாரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு மட்டும் 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கிய 1,280 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், 780 கிராமங்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன. 10 ஆயிரத்து 591 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.