திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.18 கோடியில் 10 பேருந்துகள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் திருமலையில் காற்றில் மாசு கலப்பதை தடுக்கும் விதத்தில் ஹைதராபாத் மேகா இன்ஜினீயரிங் நிறுவனம் ஒரு எலக்ட்ரிக் பஸ் ரூ.1.8 கோடி வீதம் ரூ.18 கோடி செலவில் மொத்தம் 10 எலக்ட்ரிக் சொகுசு பஸ்களை வழங்கியது. அவற்றை திருமலை கோயில் முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் அவற்றுக்கான சாவிகளை மேகா இன்ஜினீயரிங் நிறுவனத்தார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி கூறுகையில், திருமலையில் காற்றில் மாசு படிவதை தவிர்க்க பிளாஸ்டிக்கை தடை செய்தோம். இதனை தொடர்ந்து லட்டு பிரசாதங்களை வழங்கும் பிளாஸ்டிக் பைகளை கூட சணல் பைகளாக மாற்றினோம். முதற்கட்டமாக 35 பேட்டரி கார்களை தேவஸ்தான அதிகாரிகளுக்கு வழங்கினோம். விரைவில் திருமலையில் உள்ள வாடகை கார்கள் கூட மின்சார கார்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.