கொலம்பியாவில் கால்பந்து மைதானம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியாகினர்.
கொலம்பியாவில் உள்ள பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் மக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதோடு பொது சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தி அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
அரசும் கிளர்ச்சியாளர்களை அடக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆர்ஜிலியா நகரில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று மைதானம் மீது சரமாரியான ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அங்கு மீட்பு படையினர் விரைந்தனர். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு புரட்சிகர ஆயுதப்படை அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு அதிபர் குஷ்டவோ பெட்ரோ இரங்கல் தெரிவித்துள்ளார்.