ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 20 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களும் தீர்மானிக்கப்பட்ட சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்த முடியாமல் போனது.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது ஸ்டார்லிங் செயற்கைக்கோள்கள் மூலம் இணையதள வசதியை வழங்கி வருகிறது. இந்த செயற்கைக்கோள்கள் புவி வட்ட பாதையில் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பால்கான் 9 ராக்கெட் மூலம் 20 ஸ்டார்லிங் செயற்கை கோள்களை ஏவியது. இதற்கிடையே ராக்கெட்டின் இரண்டாம் நிலை என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக செயற்கைக்கோள்களை தீர்மானிக்கப்பட்ட சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்த முடியாமல் போனது. அதைவிட குறைவான தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த 20 ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களும் செயல் இழக்கும் அபாயத்தில் உள்ளது.
இது குறித்து எலான் மஸ்க் கூறுகையில், வளிமண்டல ஈர்ப்பு விசையின் மூலம் இவை இழுக்கப்படுவதை தவிர்க்க விரைவில் தீர்மானிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள்களை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இதில் 5 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளது. அதில் உள்ள அயன் டிரஸ்டர்களை பயன்படுத்தி சுற்றுவட்ட பாதையை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.