இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதன் விளைவாக, திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், ஆங்காங்கே நிலச்சரிவுகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விடும் சம்பவங்கள் ஆகியவை நடந்துள்ளன. எனவே, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ளது. மேலும், மேக வெடிப்பின் விளைவாக இதுவரை 21 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மாநிலத்தின் முதல்வர் சுக்வீந்தர் சிங் மேக வெடிப்பு பாதிப்பை நேரில் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இமாச்சலப் பிரதேசம் மாநிலம் கடுமையான சேதங்களை எதிர்கொண்டு வருகிறது. நிகழாண்டில், மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாதிப்புகளால் மட்டுமே இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு 7000 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து உத்தரகாண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், சீரமைப்பு பணிகளை தொடங்குவது சிக்கல் நிலவுகிறது. மழை நின்ற பின்னர் பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.