அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த பயங்கர வாகன விபத்தில், தமிழக பெண் உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தர்ஷினி வாசுதேவன் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி டல்லாஸில் உள்ள தனது உறவினரை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த பரூக் ஷேக் ஆர்யனுடன் பயணித்தார். லோகேஷ் பலசார்லா தனது மனைவியை சந்திக்க பென்டன்வில்லுக்கு சென்று கொண்டிருந்தார். நான்கு பேரும் கார்பூலிங் செயலியின் மூலம் காரை வாடகைக்கு எடுத்து பயணித்தனர். டெக்சாஸ் மாநிலம் காலின்ஸ் கவுன்டி பகுதியின் அன்னா நகரில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் காரின் பின்புறம் லாரி ஒன்று மோதியது. அதில் கார் கவிழ்ந்து தீப்பிடித்தது. காரில் இருந்த 4 பேரும் உடனடியாக உயிரிழந்துவிட்டனர். உடல்கள் தீயில் கருகியதால் அடையாளம் காண சிரமம் ஏற்பட்டுள்ளது. மரபணு சோதனை மூலம் யிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டுள்ளனர்.