இந்துஜா குழுமத்தை சேர்ந்த பிரகாஷ் இந்துஜா மற்றும் அவரது மனைவி கமல் இந்துஜா ஆகியோருக்கு தலா நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்களில் இந்துஜா குழுமமும் ஒன்று. இதன் தலைவர் பிரகாஷ் இந்துஜா. அவருடைய மனைவி கமால் இந்துஜா, மகன் அஜய் மற்றும் மருமகள் நம்ரதா ஆகியோர் மீது சுவிட்சர்லாந்தில் பணியாட்களை துன்புறுத்துவதாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக பணியாட்களை அழைத்து சென்று குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை செய்யும்படி மிரட்டி வேலை வாங்குவதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும் வேலைக்கு வருபவர்களின் பாஸ்போர்ட்டுகளை வாங்கிக் கொண்டு மிரட்டுவதாகும் குற்றச்சாட்டை வைத்தது. இது தொடர்பாக சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் தற்போது அந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது.
இதில் மனித கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து பிரகாஷ் இந்துஜா விடுவிக்கப்பட்டார். ஆனால் பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பிரகாஷ் இந்துஜா மற்றும் அவரது மனைவி கமல் இந்துஜா ஆகியோருக்கு தலா நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மகன் மற்றும் மருமகளுக்கு தலா நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.