மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க சுற்றுலா சென்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் 5 கோடீசுவரரும் பலியாகியுள்ளனர்.
கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக இங்கிலாந்து தொழில் அதிபர் ஹமிஷ் ஹார்டிங், ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன்ரஷ் உள்ளிட்ட 5 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை டைட்டன் நீர் மூழ்கி கப்பலில் சென்றனர். காலை 6 மணிக்கு அவர்கள் கடலுக்குள் இறக்கி விடப்பட்டனர். மாலைக்குள் இவர்கள் மீண்டும் கப்பலுக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் திரும்பவில்லை.
இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் டைட்டன் நீர் மூழ்கி கப்பல் கடலுக்கு அடியில் வெடித்து சிதறி அதில் பயணம் செய்த 5 கோடீசுவரர்களும் உயிர் இழந்தது தற்போது உறுதியாகி உள்ளது. அவர்களது உடல்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது. நீர் மூழ்கி எப்படி வெடித்து சிதறியது என்பதை அறிந்து கொள்வதற்காக அந்த பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.