அதானி குழுமத்தின் அதானி டிபன்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், திருஷ்டி 10 ஸ்டார்லைனர் என்ற ஆளில்லா உளவு விமானத்தை தயாரித்துள்ளது. இந்த விமானம் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படைக்காக ஆளில்லா கண்காணிப்பு விமானம் தயாரிக்கும் ஆர்டர் அதானி குழுமத்திடம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி வடிவமைக்கப்பட்ட திருஷ்டி 10 ஸ்டார்லைனர் உளவு விமானம் ஹைதராபாத்தில் வைத்து இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார், உளவு விமான பணிகளைத் தொடங்கி வைத்தார். கடல்சார் கண்காணிப்பு பணியில் இந்த விமானம் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த விமானம், 36 மணி நேரம் தொடர்ந்து பயணிக்கும் திறனும், 450 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து கால நிலைகளிலும் திறம்பட செயலாற்றும் என கூறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில், நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, இது போர்பந்தர் எடுத்துச் செல்லப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. கடல்சார் கண்காணிப்பு துறையில் தற்சார்பு நிலையை எட்டும் முயற்சியில் இந்த விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.