இன்றைய வர்த்தக நாளில், அதானி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடும் உயர்வை பதிவு செய்துள்ளன. இரண்டே நாட்களில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 2.6 லட்சம் கோடி அளவில் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1.4 லட்சம் கோடி அளவுக்கு உயர்வு பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் என கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. இதன் விளைவாக, அதானி குழுமத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 16% அளவுக்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக, அதானி எண்டர்பிரைசஸ் 7% , அதானி எனர்ஜி சொலுஷன்ஸ் 8% , அதானி பவர் 12% , அதானி கிரீன் எனர்ஜி 7% , அதானி டோட்டல் கேஸ் 7% , அதானி வில்மர் 3.5% , அம்புஜா சிமெண்ட்ஸ் 4% அளவுக்கு உயர்வடைந்துள்ளன. தொடர்ந்து உயர்ந்து வரும் அதானி குழுமத்தின் மதிப்பு காரணமாக, ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் கௌதம் அதானி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.