அடையாறு ஆற்றில் மே மாதம் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும் என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து 2-வது கட்டமாக ரூ.61 ஆயிரத்து 843 கோடியில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை உள்ள 3-வது வழித்தடம் சென்னையின் வடக்கு, மத்திய, தென் சென்னையை இணைக்கும் முக்கிய வழித்தடமாக பார்க்கப்படுகிறது.
இவற்றில், அடையாறு, மயிலாப்பூர் மற்றும் புரசைவாக்கம் ஆகிய இடங்களை இணைக்கும் விதமாக இந்த வழித்தடம் அமையவுள்ளது. முதல் கட்டமாக, மாதவரம் பால் பண்ணை பகுதியில் முதல் சுரங்கம் தோண்டும் எந்திரம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பணியை தொடங்கியது. தொடர்ந்து 400 மீட்டர் நீளம் கொண்ட அடையாறு ஆற்றை வருகிற மே மாதம் தோண்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி வருகிற ஜூலை மாதம் நிறைவடையும் என மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.