ஒவ்வொரு ஆண்டும் உலகில் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு சார்ந்த ஒவ்வொரு நாடுகளின் தரவரிசை பட்டியலை ‘கேளப்’ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதில், உலகில் ‘பாதுகாப்பில்லாத’ நாடாக ஆப்கானிஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் இந்த தரவரிசை பட்டியலில் இறுதியாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உலகில் உள்ள 120 நாடுகளில் வசிக்கும் மக்களிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு 51 புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த 2019 ல் ஆப்கானிஸ்தான் 43 புள்ளிகளை மட்டுமே பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில், 96 புள்ளிகளைப் பெற்று, சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. புள்ளி விவர பட்டியலின்படி, தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், ஆப்கானிஸ்தானில் தனியாக ஒரு நபர் இரவு நேரத்தில் நடந்து செல்ல கூட பயப்படுவதாக தெரிய வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து நாடு தழுவிய முறையில் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் பரவலாக அரங்கேறி வருகின்றன. அத்துடன், பாலின அடிப்படையிலான வன்முறையும் அதிகரித்துள்ளது. மேலும் 59% ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு கருத்துக்கணிப்பில், சிங்கப்பூர், தஜிகிஸ்தான், நார்வே, சுவிட்சர்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களிலும், சியரா லியோன், காங்கோ, வெனிசுலா, காபான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. இந்த கருத்துக்கணிப்பில், இந்தியா 80 புள்ளிகள் எடுத்துள்ளது. பாதுகாப்பு குறியீட்டில் வங்கதேசம் மற்றும் பிரிட்டனை இந்தியா முந்தி உள்ளது. எனினும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளுக்கு பின்னரே இந்தியா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.