தொழிலதிபர் பிரையன் ஜான்சன், தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளமையைத் தக்க வைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இவர், சமீபத்தில் வெளியிட்ட பதிவில், 'ஆயுள் மாத்திரை' ஒன்று குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இந்த மாத்திரை, வயதான ஜெர்மன் ஷெப்பர்டு நாயின் ஆயுளை அதிகரித்ததாகவும், அது மனிதனின் வயதில் 80 முதல் 90 வயதுக்கு சமமாகும் என்றும் ஜான்சன் கூறியுள்ளார். இந்த மாத்திரை DNA-வைப் பாதுகாக்கும் டெலோமெர்களை நிலைப்படுத்துகிறது. நாய்களிடம் இந்த சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்த கட்டமாக, மனிதர்கள் மீதான சோதனைகள் நடைபெற உள்ளதாக கூறியுள்ளார்.
பிரையன் ஜான்சனின் பதிவு 3.5 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும், 3,200-க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. சன் கோஸ்ட் ரெஸ்க்யூ நிறுவனம் சோதனை செய்த இந்த மாத்திரையை, டெலோமியர் மருந்துகள் நிறுவனத்தின் டாக்டர் கிறிஸ்டோபர் சாப்மேன் மற்றும் கிளீவ்லேண்ட் கிளினிக்கின் டாக்டர் மைக்கேல் ரோயிசன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இதற்கு பொதுமக்களிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மனித சோதனைகளுக்கு தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.