உலக வரலாற்றில் முதல் முறையாக வர்த்தக விண்வெளி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக வாயேஜர் ஸ்பேஸ் மற்றும் ஏர்பஸ் டிபன்ஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டணியில் இணைந்து பணி செய்ய உள்ளன. அதன்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு அதிக பயன் கிடைக்கவுள்ளது.
ஸ்டார் லேப் ஸ்பேஸ் எல்எல்சி என்ற கூட்டணி நிறுவனத்தை (வர்த்தக விண்வெளி நிலையம்) உருவாக்குவதாக ஏர்பஸ் மற்றும் வாயேஜர் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த ஜனவரி 9 அன்று இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாசா, ஐரோப்பிய விண்வெளி மையம் போன்றவற்றையும் இந்த திட்டத்தில் இணைக்கும் முயற்சியில் இந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. விரைவில், சர்வதேச விண்வெளி நிலையம் தனது செயல்பாடுகளை நிறுத்த உள்ள நிலையில், புதிய விண்வெளி நிலையத்தில் உறுப்பினர்களை இணைப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அத்துடன், சர்வதேச விண்வெளி நிலையம் மேற்கொண்ட பணிகளை இந்த விண்வெளி நிலையத்தில் வைத்து செயல்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் நாசா நிர்வாகி ஜிம் பிரின்ஸ்டன், ஸ்டார் லேப் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.