இந்தியாவின் முக்கிய பண்டிகைகளான நவராத்திரி மற்றும் தீபாவளி சமயங்களில், இணைய வர்த்தகத் தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட், மெகா விற்பனை நிகழ்வை நடத்தும். ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த நிகழ்வின் பொழுது, பல்துறை சார்ந்த ஏராளமான பொருட்கள் சலுகை விலைகளில் விற்கப்படும். ஒட்டுமொத்த விற்பனை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்பதால், இந்த நிகழ்வு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பண்டிகைக் கால விற்பனை செப்டம்பர் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அமேசான் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் நூர் படேல் இது குறித்து கூறுகையில், "இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடைபெற இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கப்பட்டு, தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்கள் முன்னால் வரை அமேசான் பண்டிகைக் கால விற்பனை நடக்கும். அமேசான் பிரைம் பயனாளர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்த விற்பனை தொடங்கப்படும். இந்த முறை, சுமார் 11 லட்சம் விற்பனையாளர்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற உள்ளனர். அவர்களில் 2 லட்சம் பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். சுமார் 2000க்கும் மேற்பட்ட, பல்துறை சார்ந்த புதிய பொருட்கள், இந்த விற்பனை நாட்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பண்டிகைக் கால விற்பனையின் முதல் பகுதியில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எங்களுடன் இணைந்து, கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளில் 10% சலுகை வழங்குகிறது" என்று கூறினார். மேலும், மக்களிடம் செல்வாக்குள்ள 150 நபர்கள் (Influencers) மூலமாக, சுமார் 600 நிகழ்நிலை (LiveStream) விளம்பரங்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். அத்துடன், குறிப்பிட்ட சில நிகழ்நிலைகளின் போது, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி இது குறித்து கூறுகையில், "பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் நிகழ்வில், இந்த ஆண்டு, சுமார் 4.2 லட்சம் விற்பனையாளர்கள் பங்கு பெற உள்ளனர். இதற்கான விளம்பரங்களில் நடிக்க, அமிதாப்பச்சன், ஆலியா பட், எம் எஸ் தோனி உள்ளிட்ட பிரபலங்களிடம் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளோம். செப்டம்பர் மாத இறுதி வரை இந்த நிகழ்வு நடைபெறும். இந்த விற்பனை நிகழ்வின் மூலமாக ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறினார்.