சீக்கிய மதத்தின் அடையாளமாக இருக்கும் அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பேருக்கு இலவச உணவு அளிக்கப்படுகிறது.
பஞ்சாபின் இரண்டாவது பெரிய நகரமான, அமிர்தசரசிற்கு சுவையான உணவு, வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகப்பழைய நகரம், மற்றும் காண்போரின் கண்களைக் கவரும் சீக்கிய மதத்தின் மிக முக்கிய வழிபாட்டுத் தலமான பொற்கோவில் என பல சிறப்புகள் உள்ளன. அந்த வகையில் பொற்கோவிலில் உள்ள சமையற்கூடம் தான் உலகிலேயே மிகப்பெரிய, சேவை அடிப்படையில் செயல்படும் சமையற்கூடமாகக் கருதப்படுகிறது. இங்கு தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவு சமைக்கப்படுகிறது. 24 மணிநேரமும் உணவு தேவைப்படும் எவரும், எந்த பாகுபாடும் இன்றி இங்கு வந்து உணவு உண்டு செல்லலாம். அதேபோல் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு முறையும் உணவு அருந்தும் அறைகள் தன்னார்வலர்களால் சுத்தம் செய்யப்படுகிறது. இந்த தூய்மைப் பணி என்பது ஆண்டு முழுவதும் எந்த விடுமுறையும் இன்றி மேற்கொள்ளப்படுகிறது.