தமிழகத்தில் காவல் துறையில் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதனை உருவாக்கும் பணியில் தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதில் முதல் கட்டமாக இந்தியாவில் தனி தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்பாட்டில் உள்ள ஆந்திர, மகாராஷ்டிரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு உயர் அதிகாரிகள் சென்று அனைத்து வசதிகள் குறித்து தகவல்களை சேகரித்து வந்தனர்.
பின்னர் இந்த சிறப்பு பிரிவுக்கான வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. இந்த திட்டத்தில் ஒரு பயிற்சி பள்ளியை தொடங்கி 18 முதல் 22 வயதுடைய திறமையான, துணிச்சல் மிக்க இளைஞர்களை தேர்வு செய்து ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற மாநிலங்கள் செயல்படும் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மூலம் பயிற்சி அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக ரூபாய் 60.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 190 பேரை தேர்வு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் இதில் டிஐஜி தலைமையில் செயல்படும் பிரிவில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள், ஐந்து கூடுதல் சூப்பிரண்டுகள், 13 துணை சூப்பிரண்டுகள், 31 சூப்பிரண்டுகள் 61 சப் - இன்ஸ்பெக்டர், 12 தொழில் நுட்ப உதவியாளர்கள், மூன்று போலீசார், 33 போலீஸ் டிரைவர்கள் ஆகியோர் பணியமர்த்த பட உள்ளனர்.