அனுர குமார திசாநாயக இன்று காலை 10 மணிக்கு இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார்.
இலங்கையில் அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரகுமார திசாநாயக வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு வயது 56. எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தில் உள்ளார். தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே 3-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதல்முறையாக, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காததால், 2-ஆவது சுற்று வாக்கு நடைபெற்றது. இதில் அனுரகுமார திசாநாயக வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அனுர குமார திசாநாயக இன்று காலை 10 மணிக்கு இலங்கையின் 9-வது அதிபராக பதவியேற்றார். இவருக்கு இலங்கையின் தலைமை நீதிபதி ஜயந்த ஜெயசூரியா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பதவியேற்றார். புதிய அதிபராக பதவியேற்ற அனுர குமார திசாநாயகின் கையில் புத்த மத பிக்குகள் கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.