உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 8ம் தேதியோடு நிறைவடைகிறது. 74 நாட்கள் பதவியில் இருக்கும் இவர் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்று பரிந்துரைக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்திற்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக ஒன்றிய அரசு கடிதம் அனுப்பியது.
பின்னர் டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதற்கான பரிந்துரை கடிதத்தையும் ஒன்றிய சட்ட அமைச்சகத்திற்கு யு.யு.லலித் அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சகம் பரிந்துரைக்கு அனுமதி வழங்கி ஜனாதிபதி ஒப்புதலுக்காக கடந்த வாரம் அனுப்பி இருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதியாக தற்போது இருக்கும் டி.ஒய்.சந்திரசூட்டை நியமனம் செய்ய ஜனாதிபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இதைத்தொடர்ந்து நவம்பர் 9ம் தேதி நாட்டின் 50வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கவுள்ளார். இவர் 2024ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.