தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா, சீன இறக்குமதிகளை இனிமேல் சீன நாணயமான யுவானில் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத் துறை அமைச்சர் செர்கியோ மாசா, இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகரான அர்ஜென்டினாவின் பீசோ நாணயத்தின் மதிப்பு சரிந்து வருவதால், வர்த்தகத்தை டாலருக்கு மாற்றாக யுவான் நாணயத்தில் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, டாலருக்கு நிகரான பீசோ மதிப்பு 227 ஆக இருந்தது. தொடர்ச்சியாக, பீசோ நாணயத்தின் மதிப்பு சரிந்து வருவதால், நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து, அர்ஜென்டினாவில் பணவீக்கம் உயர்ந்து வருகிறது. வருடாந்திர அடிப்படையில் 100% க்கும் மேலாக பணவீக்கம் உயர்ந்துள்ளது. எனவே, வர்த்தகத்தை டாலருக்கு மாற்றாக வேறு நாணயங்களில் மேற்கொண்டால், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும். அந்த வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.