ஐரோப்பாவின் வேகா ராக்கெட் பிரெஞ்சு கயானாவின் குரோவில் இருந்து நேற்று இரவு 9:50 மணிக்கு தனது இறுதிப் பயணத்தை மேற்கொண்டது. ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்தால் இயக்கப்பட்ட இந்த ராக்கெட், சென்டினல்-2சி புவி-கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து சென்றது. சுமார் 57.5 நிமிடங்களுக்குப் பிறகு, செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள், உயர் தெளிவுத்திறன் கொண்ட ஆப்டிகல் இமேஜரி மூலம் பூமியின் பல்வேறு பகுதிகளை விரிவாக ஆய்வு செய்யும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகமான வேகா ராக்கெட், தனது 22 பயணங்களில் 20 முறை வெற்றிகரமாக பணியாற்றியுள்ளது. இதன் மூலம், தனது சிறப்பான பங்களிப்பை விண்வெளித்துறையில் நிரூபித்துள்ளது. இருப்பினும், ஏரியன்ஸ்பேஸ் நிறுவனம் தற்போது அதிக சக்தி வாய்ந்த வேகா சி ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதால், வேகா ராக்கெட்டின் பயணம் இத்துடன் நிறைவு பெறுகிறது.