அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கின் விசாரணை செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து, அவரை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், சி.பி.ஐ. கெஜ்ரிவாலை ஜூன் 26-ம் தேதி ஊழல் வழக்கில் கைது செய்தது. தற்போது, அமலாக்கத்துறையின் வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு, சி.பி.ஐ. வழக்கில் அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். இன்று, டெல்லி கோர்ட்டில் காணொலி மூலமாக ஆஜராகிய கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.