28 April 2022, மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் கமல் (38). அவரது இதய ரத்தக் குழாய் (மிட்ரல் வால்வு) செயலிழந்த நிலையில்,மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார்.இதன்காரணமாக, சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், செயலிழந்த ரத்தக் குழாயை மாற்றுவது மட்டுமே பிழைக்க ஒரே வழி என கண்டறிந்தனர்.அமெரிக்காவில் அதிநவீன முறையில் திசு அடிப்படையில் உருவாக்கப்பட்ட ரத்தக் குழாயை (MITRIS) பொருத்த முடிவு செய்தனர். இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து இந்த செயற்கை ரத்தக் குழாய் இறக்குமதி செய்யப்பட்டது.இதய சிகிச்சை நிபுணர் ஏ.பி.கோபாலமுருகன் வழிகாட்டுதலின்படி, இதய ரத்தநாள சிகிச்சை நிபுணர்கள் பிரசாந்த் விஜயானந்த், மோகன் மற்றும் மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை ரத்தக் குழாயை வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். சிகிச்சைக்கு பிறகு, ஆசிரியர் கமல் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் இதய சிகிச்சை நிபுணர் கோபாலமுருகன் கூறுகையில்,இதய ரத்தக் குழாய் மாற்று அறுவை சிகிச்சைகளின்போது திசு அல்லது உலோகத்தால் உருவாக்கப்பட்ட ரத்தக் குழாய் பொருத்தப்படுவது வழக்கம். இதில் திசு ரத்தக் குழாயின் ஆயுள்காலம் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு, மீண்டும் அறுவை சிகிச்சை செய்து புதிய ரத்தக் குழாய் பொருத்த வேண்டும். உலோக ரத்தக் குழாய் பொருத்தினால் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டும்.
எனவே, அமெரிக்காவில் இளைஞர்களுக்காகவே அதிநவீன முறையில் செய்யப்பட்டுள்ள திசு அடிப்படையிலான ரத்தக் குழாயை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதன் ஆயுட்காலம் 20 ஆண்டுகள். அதற்கு பிறகும்கூட மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய அவசியம் இல்லை. கால் ரத்தக் குழாய் மூலமாகவே புதிய ரத்தக் குழாயை பொருத்த முடியும். அறுவை சிகிச்சைக்கு பிறகு சில மாதங்கள் மருந்து சாப்பிட்டால் போதும். இந்த வசதிகள் கருதியே ரத்தக் குழாயை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து,
வெற்றிகரமாக பொருத்தி உள்ளதாக தெரிவித்தார்.இந்த சிகிச்சைக்கு மொத்தம் ரூ.6 லட்சம் செலவு என்பது குறிப்பிடதக்கது.இன்னும் சில மாதங்களில், இந்தியாவிலேயே இந்த ரத்தக் குழாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு, சிகிச்சைக்கான செலவும் குறையும். என்று கூறினார்.