ஆஸ்திரேலியாவுக்கு சென்று கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாக, மாணவர் விசா விதிகளில் மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. வரும் 10ம் தேதி முதல் புதிய விசா நடைமுறை அமல்படுத்தப்படுவதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து கல்வி பயில்வதற்கு குறைந்தபட்ச சேமிப்பாக 29710 ஆஸ்திரேலிய டாலர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 1629964 ரூபாய்க்கு சமமாகும். இதனால், மாணவர் விசா பெறுவது பல மாணவர்களுக்கு கனவாக மாறியுள்ளது. மேலும், கடந்த 7 மாதங்களில் 2வது முறையாக சேமிப்புத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர் விசா மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்து பல வெளிநாட்டினர் அங்கு வேலை செய்வதாக புகார் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்து கல்வி பயில்வதற்கு தேவையான நிதி மாணவர்களிடம் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. எனவே, அவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கள் சொந்த தேவைக்காக சிறு சிறு வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் குறைகிறது. அதன்படி, முறைகேடுகளை தவிர்க்க முடியும் என்று ஆஸ்திரேலியா கூறுகிறது.