வரும் கல்வி ஆண்டு முதல் ஆறாம் வகுப்பு சேரும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி மூலமாக வங்கி கணக்குகள் தொடங்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு வசதிகள் செய்து வருகிறது. மேலும் மாணவர்களின் கற்றலில் தொய்வு ஏற்படாதவாறு உதவி தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் அவர்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் நேரடி பயனாளர் பரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகையில் இந்த பணியை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக வரும் கல்வி ஆண்டு முதல் ஆறாம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பள்ளி மூலமாகவே வங்கி கணக்குகள் தொடங்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அப்போது ஆதார் புதுப்பிக்கப்பட்டு ஆதார் பதிவினை வங்கி கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சிரமம் இன்றி ஊக்கத்தொகை மற்றும் உதவித்தொகைகளை பெற்றுக் கொள்ளலாம்.