பள்ளி, கல்லுாரி சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழை இனி கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 1969ல் இயற்றப்பட்ட பிறப்பு - இறப்பு பதிவு சட்டத்தின்படி, நாட்டில் நிகழும் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புகளை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிறப்பு - இறப்புகளை பதிவு செய்ய தங்களுக்கென்று தனி நடைமுறையை அமைப்புகள் பின்பற்றி வருகின்றன. இப்படி தனித்தனியாக உள்ள தரவு தளங்களை ஒன்றாக இணைக்கும் விதமாக, பிறப்பு - இறப்பு பதிவு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில், இந்த திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. பள்ளி, கல்லுாரி சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, மத்திய - மாநில அரசு பணி, பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளுக்கு பிறப்பு சான்றிதழை கட்டாயமாக்க மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒருவர் 18 வயதை அடையும்போது அவரது பெயர் தானாகவே வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படும். இறந்தவர்களின் விபரம் பட்டியலில் இருந்து தானாகவே நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.