மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று விவாதித்தனர்.
நடப்பாண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், அனைத்துக்கட்சி கூட்டம் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் ஜோஷி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அமைச்சர் கள் ராஜ்நாத் சிங், பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல், அர்ஜுன் ராம் மேக்வால், வி.முரளீதரன், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் சுதீப் பந்தோபாத்யாய, சுகேந்து சேகர் ராய், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.கேசவராவ், நாம நாகேஷ்வர ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விவாதித்தனர்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இறுதி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் காங்கிரஸ் சார்பில் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 13-ம் தேதி நிறைவடைகிறது. கூட்டத் தொடரின் 2-வது பகுதி மார்ச் 13-ம் தேதி தொடங்கும். அப்போது பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்தப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.