ரஷியா துருப்புகளை திரும்ப பெற்றால்தான் அமைதி பேச்சுக்கான வாய்ப்புள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆப்பிரிக்கா தலைவர்கள் இருநாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர். முதற்கட்டமாக நேற்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தனர். அப்போது அமைதி பேச்சுவார்த்தை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. ஆப்பிரிக்கா தலைவர்கள் இன்று ரஷிய அதிபர் புதினை சந்திக்க இருக்கிறார்கள்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப்பின் ஜெலன்ஸ்கி கூறுகையில், ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பிராந்தியத்தில் இருந்து ரஷிய துருப்புகள் வாபஸ் பெற்ற பின்னரே, அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புள்ளது. ஆக்கிரமிப்புக்காரர்கள் எங்கள் நிலத்தில் இருக்கும்போது, ரஷியாவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் தயாராகுவது, எங்களது நிலத்தை முடக்குவதாகும். எங்களது நிலத்தில் இருந்து ரஷியா துருப்புகள் உண்மையாகவே வெளியேற வேண்டும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.