நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக, கடந்த 2008 ஆம் ஆண்டு, சந்திரயான் 1 விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான முதல் ஆதாரத்தை உலகுக்கு வெளிக்காட்டியது. சந்திரயான் 1 திட்டத்தின் தரவுகள் படி, நிலவில் தண்ணீர் உருவாவதற்கு, பூமி மிக முக்கிய காரணமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் குடியேறுவதற்கு ஏதுவாக, நிலவில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நிலவில் தண்ணீர் உருவாவதற்கான மூல காரணம் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. சூரியனிலிருந்து வெளிவரும் அதிசக்தி வாய்ந்த புரோட்டான்கள், நிலவின் மேற்பரப்பை தாக்கும் பொழுது தண்ணீர் உருவாகலாம் என தெரியவந்துள்ளது. அதே வேளையில், சூரியனிலிருந்து வெளிவரும் அதிசக்தி வாய்ந்த கதிர்கள் பூமியின் காந்தப்புலனால் உந்தப்பட்டு நிலவை அடைகிறது. அதன்படி, பூமியின் காந்தப்புலத்துக்குள் நுழையாமல் நிலவை அடையும் சூரிய கதிர்களும், பூமியின் காந்தப்புலனால் உந்தப்பட்டு அடையும் கதர்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் படி, பூமியின் காந்தப்புலம் நிலவில் தண்ணீர் உருவாகுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சி தொடர்பான விரிவான தகவல்கள் நேச்சர் அஸ்ட்ரானமி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.