இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கிய தென் துருவப் பகுதியில் சுமார் 160 கிலோமீட்டர் அகலமுள்ள கிரேட்டரை கண்டுபிடித்துள்ளது. பிரக்யான் ரோவர் மூலம் கண்டறியப்பட்டுள்ள இந்த கிரேட்டர், நிலவின் மிகப்பெரிய மற்றும் பழமையான கிரேட்டர் என்று அறியப்படும் ஐட்கென் படுகையிலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அகமதாபாத்தின் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சயின்ஸ் டைரக்ட் இதழில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்திரயான் 3 மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரேட்டர், ஐட்கென் படுகையை விடவும் பழமையானது என்று தெரிவித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு நிலவு ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பிரக்யான் ரோவர் எடுத்துள்ள உயர்தர படங்கள் மூலம், இந்த கிரேட்டரை பற்றிய முக்கியமான தகவல்களை விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். இதன் மூலம் நிலவின் ஆரம்பகால புவியியல் வரலாற்றைப் பற்றி மேலும் ஆழமாக ஆராய முடியும் என்று கூறுகின்றனர்.