சந்திரயான் 3 விண்கலம், நிலவை சுற்றி சுற்றுவட்ட பாதையில் பயணித்து வருகிறது. இந்த நிலையில், அதன் தொலைவை குறைக்கும் மூன்றாம் கட்ட முயற்சி இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 14ஆம் தேதி, சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நிலவை நோக்கி தொடர்ந்து பயணித்து வரும் விண்கலம், தற்போது, நிலவை மிகவும் நெருங்கியுள்ளது. இன்று மதியம் 12:00 மணி அளவில், அதன் சுற்றுவட்ட பாதை தொலைவு மூன்றாவது முறையாக குறைக்கப்பட்டது. தற்போதைய நிலையில், நிலவில் இருந்து குறைந்தபட்சம் 150 கிலோமீட்டர் மற்றும் அதிகபட்சம் 177 கிலோ மீட்டர் தொலைவில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றுவட்ட பாதையில் பயணித்து வருகிறது. அடுத்ததாக, வரும் புதன்கிழமை காலை 8:30 மணி அளவில் விண்கலத்தின் சுற்றுப்பாதையை குறைக்கும் அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி, சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என கூறப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் எதிர்பார்த்தபடி செயல்பட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று உறுதி செய்துள்ளனர்.