சந்திரயான் 3 விண்கலம் தற்போது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, விண்கலத்தின் நிலவு சுற்றுவட்ட பாதையின் உயரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டு வருகிறது. எனவே, திட்டமிட்டபடி சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெறும் என இஸ்ரோ சேர்மன் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், சுமார் 1400 கிலோ மீட்டர் தொலைவில் நிலவை சுற்றி வரும் சந்திரயான் விண்கலம், இனி வரும் நாட்களில் 100 கிலோ மீட்டர் தூரத்தில் நிலவை அணுக உள்ளது. தொடர்ந்து, ஆகஸ்ட் 23ஆம் தேதி, விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, நிலவில் வெற்றிகரமாக லேண்டரை தரையிறக்கிய 4வது நாடாக இந்தியா வரலாற்றில் இடம்பெற உள்ளது. எனவே, சந்திரயான் 3 திட்டம் முக்கிய கட்டத்தை நெருங்கி உள்ளது.