நிலவினை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் இன்னும் இரண்டு நாட்களில் தனது அடுத்த பணிகளை தொடங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை மாதம் விண்ணில் சந்திராயன் 3 விண்கலம் நிலவின் தென்புற பகுதியை ஆராய விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் தனது பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்த லேண்டர் ரோவர் ஆகியவை சூரியனின் சக்தியால் இயங்கும் திறன் கொண்டவையாக அமைக்கப்பட்டதனால் சூரிய ஒளி இருக்கும் நேரம் மட்டுமே அவை செயல்படும். சூரிய ஒளியை பயன்படுத்தி இவை வெற்றிகரமாக செயல்பட்டு வந்த நிலையில் சந்திரனில் 14 நாட்கள் இரவு, 14 நாட்கள் பகல் இருக்கும் இதை கணக்கிட்டு 14 நாட்கள் தங்கள் பணி வெற்றிகரமாக செய்து சூரிய ஒளி மறையும் தருவாயில் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது விக்ரம் லேண்டர் நாளை மறுநாள் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டு தனது பணியை நிலவில் தொடங்கும் என விஞ்ஞானிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை இதன் மூலம் நிறைய தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் கிடைக்க சில மாதங்கள் அல்லது இரண்டு வருடங்கள் கூட ஆகலாம். இந்நிலையில் மீண்டும் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் விழித்தெழுந்தால் அதிக தரவுகள் கிடைக்கும் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.