சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 பேருந்து முனையங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்கள் டைல்ஸ் பெயர்ந்தும், வெளிச்சம் குறைவாகவும், கழிப்பறை வசதி இல்லாமல், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல், பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாமல் பல கட்டமைப்பு குறைபாடுகளுடன் இருந்து வருகின்றது.
இதில் திரு.வி.க நகர், தண்டையார்பேட்டை, கண்ணதாசன் நகர், முல்லை நகர், பெரியார் நகர் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் ஆகிய 6 இடங்களில் மேம்பாட்டு திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் கொண்டுவரப்படுகின்றன. இன்னும் பிற முனையங்களிலும் எதிர்காலத்தில் இவை கொண்டுவரப்படலாம்.இந்த மேம்பாட்டு திட்டத்தில் மேற்கூரைகள், சூரிய ஒளி தகடுகள், தூய்மையான கழிப்பிட வசதி, அமர்ந்திருக்கும் வசதியுடன் காத்திருக்கும் அறைகள், சுத்தமான குடிநீர் வசதி, கண்காணிப்பு கேமரா வசதி, அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் என சகல வசதிகளுடன் அமைக்கப்படும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும் திரு.வி.க நகர் மற்றும் அம்பத்தூர் நிலையங்களுக்கான ஒப்பந்த புள்ளிகள் ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் இதற்கான வரைபட பணிகளை செய்து முடித்துள்ளனர். இதில் முதல் கட்டமாக 2024 ஆம் ஆண்டு இந்த திருவி.க நகர் மற்றும் அம்பத்தூர் முனையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. வடசென்னை வளர்ச்சிக்கான நல திட்டங்களில் இந்த பேருந்து நிலைய திட்டங்களும் அடங்கும் என தெரிவித்துள்ளனர்.