அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீனாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கின் காங்கை நேற்று அவர் பெய்ஜிங்கில் சந்தித்தார். அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் வலுத்து வரும் வேளையில், அமெரிக்க அமைச்சரின் சீன பயணம் மற்றும் இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு ஆகியவை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், ஆண்டனி பிளிங்கன் தனது சீன பயணத்தை மேற்கொள்ள இருந்தார். ஆனால், அமெரிக்க வான்பரப்பில் சீன உளவு பலூன் நுழைந்ததை அடுத்து, அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, அவரது சீன பயணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தைவான் விவகாரம், உக்ரைன் ரஷ்யா போரில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவது, கொரோனா தொற்று பரவல், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம், ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளை சீனா தனது கடன் வலையில் விழச் செய்வது, உள்ளிட்ட பலவற்றில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பில், இவை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், இரு தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் பகிரப்படவில்லை.