நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சரிடம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நம் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் கோவா மாநிலம் பணஜி அருகே உள்ள பெனாலிமில் நடந்தது. அப்போது சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங்குடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இரு தரப்பு உறவு குறித்து சீன அமைச்சருடன் விரிவான ஆலோசனை நடந்தது. அப்போது கிழக்கு லடாக் எல்லை பகுதியில் நிலவும் பிரச்னைக்கு விரைவில் சுமூக தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து அவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, 'ஜி -20' மாநாடு ஆகியவை குறித்தும் அவருடன் பேச்சு நடத்தப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.