சீனாவின் பொருளாதாரம் தற்போது சற்று தடுமாறி வருவதால், அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர சீன அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. சீனாவின் மிகப்பெரிய அரசு வங்கிகளில் சுமார் 1 டிரில்லியன் யுவான் ($142 பில்லியன்) என்ற அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிதி, சிறப்பு இறையாண்மை பத்திரங்கள் மூலம் திரட்டப்படும். கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, இதுபோன்ற பெரிய அளவில் வங்கிகளில் முதலீடு செய்வது இதுவே முதல் முறையாகும்.
சீனாவின் முக்கிய வங்கிகளான தொழில்துறை மற்றும் வணிக வங்கி, பேங்க் ஆஃப் சைனா போன்ற வங்கிகள் தற்போது லாபத்தில் நல்ல வளர்ச்சியை காணவில்லை. மேலும், குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, இந்த வங்கிகள் அதிக அளவில் மோசமான கடன்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், இந்த வங்கிகளின் நிதி நிலைமையை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த முதலீடு செய்யப்படுகிறது.