இலங்கையில் சீன ராணுவ நடமாட்டம் உள்ளதால் குமரி கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவுக்கப்பல் இலங்கை கடலில் முகாமிட்டுள்ளது. மேலும், அங்கு சீன ராணுவ வீரர்கள் நடமாட்டம் பரவலாக உள்ளது. இதனால் இந்தியாவின் கடலோரப் பகுதிகளை துல்லியமாகவும், தீவிரமாகவும் கண்காணிக்குமாறும், பாதுகாப்பை அதிகரிக்குமாறும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையின் அருகே உள்ள கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை கடற்படை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சந்தேகத்துக்கிடமாக கடலில் சுற்றும் படகுகள் சோதனையிடப்படுகின்றன. குமரி கடலில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களிடமும் கடலுக்குள் வழக்கத்தைவிட வித்தியாசமாக தென்படும் படகு, மற்றும் நபர்கள் குறித்து கடற்படை காவல்துறையினருக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் 11 கடலோர சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு வரும் வெளிநபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.