சீனாவின் நிலவு ஆய்வுத் திட்டமான சாங்கே-4 இன் ஒரு பகுதியாக அனுப்பப்பட்ட யுட்டு-2 ரோவர், நிலவில் நீண்ட காலம் இயங்கும் ரோவராக சாதனை படைத்துள்ளது. கடந்த 2019 ஜனவரி 3 ஆம் தேதி நிலவில் தரையிறங்கிய இந்த ரோவர், முதலில் 3 மாதங்கள் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 71 நிலவு நாட்கள், அதாவது கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் 9 மாதங்கள் வரை இயங்கி வருகிறது.
வான் கார்மன் பள்ளத்தில் சுற்றித் திரிந்து வரும் இந்த ரோவர், சமீபத்தில் நிலவின் நிலப்பரப்பில் எடுத்த பல்வேறு புகைப் படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. குறிப்பாக, ரோவரின் தடயங்கள் ‘கேக்’ போன்று தோன்றும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது சீனாவின் இலையுதிர் காலத்தின் திருவிழாவை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் எதிர்கால நிலவு ஆய்வு திட்டங்களில், ரிலே செயற்கைக்கோள்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டுக்குள் சாங்கே-7 திட்டம் என பல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.