அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்ததன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையிலும் தென்பட்டுள்ளது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை இன்று 1%க்கும் மேல் வீழ்ச்சியடைந்தன. குறிப்பாக, 30 பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ சென்செக்ஸ் 886 புள்ளிகள் குறைந்து 80,982-ல் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 293 புள்ளிகள் குறைந்து 24,718-ல் நிறைவடைந்தது. இந்த வீழ்ச்சியால், இந்திய பங்குச் சந்தையின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4.56 லட்சம் கோடி குறைந்துள்ளது.
ஆட்டோமொபைல், எரிசக்தி மற்றும் ஐடி உள்ளிட்ட பல துறைகளின் பங்குகள் பெரும் இழப்பை சந்தித்தன. குறிப்பாக, நிஃப்டி ரியல் எஸ்டேட், ஆட்டோ, மெட்டல் மற்றும் ஐடி துறைகளின் பங்குகள் 2% முதல் 3.5% வரை வீழ்ச்சியடைந்தன. பார்மா மற்றும் சுகாதாரத்துறை பங்குகளைத் தவிர மற்ற அனைத்து துறைகளின் பங்குகளும் வீழ்ச்சியை சந்தித்தன.