பிரேசில் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட புயல் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரியோ கிராண்டே டோ சூல் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே டோ சூல் மாகாணத்தில் 150 முனிசிபாலிட்டிகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. பல்வேறு இடங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10,000 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், 21 முதல் 60 பேர் வரை காணவில்லை என கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. வரலாற்றில் மிகவும் மோசமான பேரிடராக இது உள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளார். பிரேசில் அதிபர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.