திருவள்ளூர் ஆ.ர்கே பேட்டை அருகே அரசு நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்களுக்கு கடந்த 2000- ஆம் ஆண்டு திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மூலம் பட்டா வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சிலர் வீடு கட்டினர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசு வழங்கிய இலவச வீட்டு மனைகளில் யாரும் வீடு கட்ட கூடாது என்று வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வீடுகள் கட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் வீட்டு மனை பெற்ற பயனாளிகள் வீடுகள் கட்டிக் கொள்ள அனுமதி வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கியிருந்தனர். இந்நிலையில் அங்கு தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினர் அனுமதி இன்றி அரசு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது