கேரளாவில், ஒரே நேரத்தில் பல இடங்களில் அமலாக்கத் துறையினர் களத்தில் இறங்கி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கடந்த 3 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 10000 கோடி ரூபாய் ஹவாலா பண மோசடி நடைபெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. கேரளாவில் 25 ஹவாலா ஏஜென்ட்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இவர்கள் மூலம், 80 நாடுகளுக்கு இந்திய ரூபாய் மட்டுமின்றி வெளிநாட்டு நாணயங்களும் ஹவாலா முறையில் கைமாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில், கொச்சியில் உள்ள பெண்டா மேனகா ஷாப்பிங் மால், மொபைல் உபகரணங்கள் விற்கும் கடை, பிராட்வே பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் விறப்னையகம், அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகம், சங்கனாச்சேரியில் உள்ள டிராவல் ஏஜென்சி, கோட்டயத்தில் உள்ள துணிக்கடை ஆகியவற்றில் இந்த மோசடிகள் நடந்துள்ளது உறுதியாகி உள்ளது. அரசியல் வியாபாரம், வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்காக ஹவாலா மோசடி நடந்துள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.