கடந்த 24 ஆண்டுகளாக பூமியின் காந்தப்புலத்தை ஆய்வு செய்த ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சல்சா செயற்கைக்கோள், செப்டம்பர் 8, 2024 அன்று தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தது. செயற்கைக்கோள் திட்டமிட்டபடி பூமிக்குள் விழுந்தது பற்றி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடந்த 2000 ஆம் ஆண்டு கிளஸ்டர் செயற்கை கோள்களில் ஒன்றாக விண்ணில் செலுத்தப்பட்ட சல்சா, கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டுப்படுத்தப்பட்ட இறங்குதல் செயல்பாட்டில் உள்ளது. செப்டம்பர் 8 மதியம் 2:47 மணிக்கு பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்த போது, 1,200 பவுண்டுகள் எடையுள்ள செயற்கைக்கோளின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாகி விட்டன. மீதமுள்ள சிறு துண்டுகள் பாதுகாப்பாக கடலில் விழுந்தன. இந்த வெற்றிகரமான செயல்பாடு, விண்வெளி குப்பைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ESA வின் "ஜீரோ டெப்ரிஸ்" இலக்கை அடைவதில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கிளஸ்டரில் உள்ள மற்ற செயற்கைக்கோள்கள் 2025 மற்றும் 2026 க்கு இடையில் பூமிக்குள் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.