பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உட்பட அனைத்து கட்சி தலைவர்களையும் விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைதாகி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், இம்ரான் கானின் கட்சிக்கு தடை விதிக்க அரசு திட்டமிடுவதாக தகவல் வெளிவந்தது. அதன் ஒரு பகுதியாக இஸ்லாமபாதில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அஹ்மத் மற்றும் பல பெண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு இம்ரான் கான் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இம்ரான் கான் உட்பட சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நாடு தழுவிய போராட்டத்திற்கு தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு முன்னெச்சரிக்கையாக பிறப்பிக்கப்பட்டது. இஸ்லாமாபாத் செல்லும் நெடுஞ்சாலைகளை போலீசார் மூடினர். எனினும் பல்வேறு இடங்களில் கட்சியினர் நாடு தழுவிய போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சண்டை நடந்தது. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.