உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசு தேர்தல் பத்திரத் திட்டத்தை கொண்டு வந்தது. இதில் தேர்தல் செலவுகளுக்காக கட்சிகள் வசூலிக்கும் நன்கொடை ரொக்கமாக இல்லாமல் வங்கி வழியாக கை மாறினால் கருப்பு பணத்தை தடுக்கலாம் என திட்டமிடப்பட்டது. அதன்படி தேர்தல் பத்திரங்கள் ஆயிரம், பத்தாயிரம், ஒரு லட்சம், பத்து லட்சம், ஒரு கோடி என 5 மதிப்புகளில் தயாரிக்கப்பட்டது. மேலும் இதை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகள் மட்டுமே விற்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேர்தல் பத்திரங்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையில் இந்த பத்திரங்கள் செல்லாது என கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஸ்டேட் பேங்க் உடனடியாக இந்த தேர்தல் பத்திரங்கள் விற்பனையை நிறுத்த வேண்டும் எனவும், தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள், அதன் மதிப்பு, அதைப் பெற்ற கட்சிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேர்தல் கமிஷனருக்கு மார்ச் மூன்றாம் தேதிக்குள் ஸ்டேட் பேங்க் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. அதனை தேர்தல் கமிஷன் தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் கமிஷனுக்கு முழு விவரத்தை ஸ்டேட் பேங்க் அளிக்க வேண்டும் என கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.