ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட், 48 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. கிட்டத்தட்ட 15 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு பால்கன் 9 ராக்கெட் தனது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. முந்தைய ஏவுதலின் போது, ராக்கெட்டின் மேல் நிலையில் திரவ ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதால், ஏவுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ராக்கெட்டில் ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்து மீண்டும் ஏவுதல் பணிகளை தொடங்கியுள்ளது.
இடைநிறுத்தத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுதலில், ராக்கெட்டின் முதல் நிலை பூஸ்டர் பாகம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பி உள்ளது. புளோரிடாவிலிருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், உலகெங்கிலும் இணையத்தை வழங்கும் நோக்கில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி உள்ளது. இந்த ஏவுதலின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், “அதிகமான செயற்கைக்கோள்களை ஏவிய முதல் நிறுவனம்” என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் கூட்டமைப்பில் 3000-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் உள்ளன.