பான் மசாலா மற்றும் சிகரெட்கள் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது அதிகபட்ச செஸ் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நிதி மசோதா 2023 ஐ சில திருத்தங்களுடன் ஒன்றிய அரசு மக்களவையில் நிறைவேற்றியது. அதன் படி பான் மசாலா, சிகரெட்டுகள் மற்றும் இதர புகையிலை பொருட்களுக்கு அதன் சில்லரை விலை விற்பனையில் அதிகபட்ச ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி விதிக்கப்பட உள்ளது. பான்மசாலாவுக்கான சில்லரை விலை ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சமாக 51 சதவீதம் வரை செஸ் வரி விதிக்கப்படும். இந்தியாவில் தற்போது புகையிலை பொருட்கள் மீது 290 சதவீத வரியும், பான் மசாலா பொருட்கள் மீது 135 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.
கடந்த 2021ல் ஒடிசா நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு பான் மசாலா மற்றும் குட்கா மீது விதிக்கப்படும் வரி தொடர்பாக ஆய்வு செய்தபோது வரி ஏய்ப்புகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் இதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.