தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2வது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் இலங்கை கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய ஸ்ரீலிங்கன் ஏர்லைன்ஸ் விமானம், சென்னையில் இருந்து கொழும்பு நகருக்கு புறப்பட வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டன.
லண்டன், அபுதாபி, துபாயில் இருந்து சென்னை வர வேண்டிய விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை வந்தன. அதிகாலையில் டெல்லி மற்றும் மதுரைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. விமான ஓடுதள பகுதியில் தேங்கி இருக்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் 2வது நாளாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.