2024 ஆம் நிதி ஆண்டின் முதலாம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி குறித்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8% ஆகும்.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் படி, 2023 ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 13.1% ஆக இருந்தது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் உற்பத்தி துறையில் உள்நாட்டு வளர்ச்சி குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், வேளாண் துறை வளர்ச்சி 3.5% ஆகவும், உற்பத்தி துறை வளர்ச்சி 4.7% ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, கடந்த ஆண்டில், 2.4% மற்றும் 6.1% ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சேவைத்துறை வளர்ச்சியும், மத்திய அரசின் மூலதன செலவினமும், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் சூழலில், இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, சீனாவின் 6.3% ஜிடிபி யை விட 1.5% உயர்வாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.